Tuesday, April 20, 2010

வைக்கோல்போராய் இருக்காதீர்கள்!

வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.

பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை. 

அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.

அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே. கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை. 

அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள். 'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.

கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா? இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.

Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே. ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப் பாராட்டலாம். அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.

அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும். மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும். 

அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது. உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள். அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

No comments: